மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகம் கைதி படத்தில் நடித்திருக்கிறார். கைதி படத்தில் 10 வருடத்துக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவருபவராக வேடம் ஏற்றிருக்கிறார் ஹீரோ கார்த்தி.
இதுபற்றி அவர் கூறியதாவது: நல்ல கதை அம்சமுள்ள, வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணுவேன். அந்நிலையில் என்னை தேடி வந்த படங்கள் மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி.
மெட்ராஸ் படம் நடித்தபோது ஒரு சுவற்றில் வரைந்து வைத்த ஓவியத்தில் இவ்வளவு அரசியல் இருக்குமா என்று என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. எனவே அதில் நடித்தேன். அதேபோல் தீரன் படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவானது. அந்த சம்பவம் நடந்த காலகட்டம் முடிந்திருந்தாலும் இன்னும் அதனை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது. கைதி படம் அப்படித்தான்.
சிறையிலேயே நான்கு சுவற்றையும், வெள்ளை கைதி உடை, காக்கி போலீஸ் உடையை மட்டுமே 10 வருடம் பார்த்தவனுக்கு சிறையிலிருந்து வெளியில் வந்ததும் அவன் மன நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் கதையாக கைதி அமைந்திருக்கிறது.
ஒரே இரவில் நடப்பதுபோல் கைதி படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது.. எனக்கு லாரி ஓட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. இப்படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. எப்போதுமே லாரிகளில் சரியாக பிரேக் பிடிக்காது.
அதுபோன்ற பிரேக் பிடிக்காத பழைய லாரி ஒன்றை ஓட்டி இப்படத்தில் நடித்திருக்கிறேன். முழுக்க இரவில் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. இதனால் வீட்டில் இரவில் தங்க முடியவில்லை. படப்பிடிப்பு முடித்து சென்றதும் பகலில் உறக்கம். பழக்க வழக்கமே படம் முடியும் வரை மாறிவிட்டது. அந்த கஷ்டத்துக்கு ஏற்ற பலன் கைதி படத்தில் கிடைத்திருக்கிறது.
இதில் ஹீரோயினே கிடையாது. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவு அமைத்திருக்கின்றனர். அஞ்சாதே பட ஹீரே நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ். இசை அமைக்கின்றனர். சில படப்பிடிப்புக்கு சென்றால் எப்போதும் சத்தமாக இருக்கும். லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் அவ்வளவு அமைதியாக இருக்கும்.
இவ்வாறு கார்த்தி கூறினார்.