வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிவிடுகிறார் சிருஷ்டி டாங்கே. விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை, உதயநிதி ஸ்டாலின் நடித்த சரவணன் இருக்க பயமேன், பிரசன்னா, கலையரசன் நடித்த காலக்கூத்து, பரத்துடன் பொட்டு போன்ற படங்களில் நடித்த இவர் இம்முறை நடுத்தர குடும்ப கதையாக உருவாகும் 'கட்டில்' கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இவி.கணேஷ்பாபு ஹீரோவாக நடித்து தயாரித்து இயக்குகிறார்.
படம் பற்றி கணேஷ்பாபு கூறியதாவது: காரைக்குடி பகுதியில் கட்டில் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்திற்காக காரைக்குடியில் மூன்று தலைமுறை கட்டில் ஒன்றை தேடி கண்டுபிடித்தோம். பழமையான அந்த கட்டிலை பார்த்தாலே பல கதைகளை சொல்லும். இதற்காக புதிய கட்டில் செய்யலாம் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் அதில் பழமையின் தோற்றத்தை இயல்பாக தர முடியாது என்பதால் பழைய கட்டிலை தேடி கண்டுபிடித்து வாங்கியிருக்கிறோம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டில் என்பது ஒரு குடும்ப அங்கத்தினராகவே அமைந்திருக்கிறது. மூன்று தலைமுறை, நான்கு தலைமுறை கட்டில்களும் பல இல்லங்களில் உள்ளது. அந்த கட்டிலை கேட்டால் ஆயிரம் கதைகள் சொல்லும். தாம்பத்தியம் முதல் இறப்பு வரை அந்த கட்டில் கண்டிருக்கும்.
அப்படியொரு மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த கதையாக கட்டில் ஸ்கிரிப்ட் உருவாகியிருக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவியாக நானும், சிருஷ்டி டாங்கேவும் நடிக்கிறோம். ரவி சங்கரன் ஒளிப்பதிவு. பி.லெனின் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறர். இலக்கியன் இசை' என்றார் கணேஷ்பாபு.