கோவாவில் இம்மாதம் நடக்கும் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய சினிமாவுக்கு கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி என்ற விருதை அவருக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அந்த டுவிட்டர் பதிவில் மத்திய மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், “சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது வழங்கும் மத்திய அரசின் முடிவை நடிகர் ரஜினிகாந்திடம் தெரிவித்து விட்டோம். அவரும் அந்த விருதை வாங்க சம்மதித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் டிவிட்டர் பதிவு
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் சிறப்பு விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட பொன்விழாவில் எனக்கு கவுரவம் மிக்க சிறப்பு விருதை வழங்குவதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.