நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா நியமனம்.... தமிழக அரசு திடீர் உத்தரவு .....

by Chandru, Nov 7, 2019, 17:16 PM IST
Share Tweet Whatsapp
சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. நாசர், விஷால் தலைமையிலான அணி, கே.பாக்யராஜ் தலைமையிலான அணி தேர்தலில் போட்டியிட்டது. வாக்கு பதிவும் நடந்தது. இந்நிலையில் தேர்தல் தொடர்பாக  ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ளதால் வாக்குகள் இதுவரை எண்ணப்படவில்லை.
இதற்கிடையில் நடிகர் சங்கத்தின் 2015 - 2018ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. அதிலிருந்து தற்போது வரை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை.
 
பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் வரை நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
 
புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு வரும் வரை சிறப்பு அதிகாரி தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக பணிகள், நடிகர் சங்க கட்டடப் பணி மற்றும் நடிகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகளை கவனிபப்பார் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வாகிக்கவும்  தனி அதிகாரியை அரசு நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a reply