ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் 'தலைவி' படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார், ஜெயலலிதா வாக கங்கனா ரனாவத் நடிக்கிறார் என்றும் அதேபோல ஜெயலலிதா வாழ்க்கை கதையாக குயின் உருவாகிறது.
வெப் சீரிஸாக இதனை கவுதம் மேனன் இயக்க ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. இதன் டீஸர், டிரெய்லர் வெளியானது. தற்போது அதில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டுமே கற்பனை கதாபாத்திர கதை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, கோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் திரைப்படமும் இணையதள தொடரும் உருவாகிறதா என்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும், ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து இயக்குனர் விஜய் தரப்பில் அளித்த பதிலில், 'தலைவி என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி தலைவி படம் எடுக்கப்படுகிறது. பல ஆண்டாக புழக்கத்தில் உள்ள இப்புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டது.
குயின் வெப் சீரிஸ் இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், 'ஜெயலலிதா வாழ்க்கை அடிப்படையாக வைத்து இந்த தொடர் தயாராகவில்லை. குயின்' என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது' என கூறப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கவுதம் வாசுதேவ் மேனன் தனது தொடரில் தீபா குறித்து கதாபாத்திரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட அடிப் படையில் தொடருக்கு தடை இல்லை. 'தலைவி' படத்தில் இடம்பெறுவது கற்பனைப் பாத்திரம் என குறிப்பிடுவ தால் அதற்கும் தடை விதிக்க முடியாது' என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்ததுடன், தலைவி படம் கற்பனையானது என அறிவிப்பு வெளியிடவும் நீதிபதி உத்தரவிட்டார்.