பரத் நடித்த காளிதாஸ் படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. அதன் வெற்றி விழாவை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார். அதில் தயாரிப்பாளர் மணி தினகரன், இயக்குனர் ஸ்ரீசெந்தில், அபிஷேக், சக்திவேல், நடிகர் ஆதவ் கண்ணதாசன் கலந்துகொண்டு பேசினார்கள். பின்னர் பரத் பேசினார். அவர் கூறியதாவது:
வெற்றி நாயகன் என்ற வார்த்தையைக் கேட்டு ரொம்பநாள் ஆச்சு. நேற்று மும்பையில் சூட்டிங்கில் இருக்கும்போது காளிதாஸ் சக்ஸஸ் மீட் இருக்கு என்று சொன்னார்கள். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் சினிமாவிற்கு வந்த 17 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும் தான்.
ஆனால் என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம். 2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். சினிமாவில் நிறையபேர் இந்தப்படத்தை பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால் இவர் நடித்து இருக்கிறார்.
இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால் இந்தப்படத்தை முதலில் பார்த்த பிரஸ் பெரிதாக கொண்டாடினார்கள். நெகட்டிவ் ரிவியூ ஒன்று கூட இல்லை. அதற்கு ஊடகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. இப்போ ஒரு நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியீட வேண்டும், அதற்கு தியேட்டர்ஸ் எப்படி போட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார். எல்லாருமே இந்தப்படத்தை பெரிதாக்க வேண்டும் என்று மொத்தமாக உழைத்தோம். அடுத்தவாரமும் இந்தப்படத்தை நாங்க கொண்டு போகணும்.
ஏன்னா அடுத்தவாரம் ஹீரோ, தம்பி, தபாங் 3 ஆகிய படங்கள் வெளிவருகிறது. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ்சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். ரொம்ப வருசம் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு பரத் கூறினார்.