நடிகை ரவீணா டான்டன் பெயரை எங்கோ கேள்விபட்டதுபோல் இருக்கிறதே என்று எண்ணுவார்கள். அவர்கள் கொஞ்சம் பின்னோக்கி சென்று கமல் நடித்த ஆளவந்தான் படத்தையும் அர்ஜூன் நடித்து சாது படத்தையும் நினைவு படுத்தினால் அதில் ரவீணா நடித்திருப்பது ஞாபகத்துக்கு வரும்.
மும்பையில் செட்டிலாகிவிட்ட ரவீணா இந்தி படங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் யூ டியூப் காமெடி ஷோ ஒன்றில் வேறு சில பாலிவுட் பிரபலங்களுடன் கலந்துகொண்டார். காமெடியாக பேசுகிறோம் என்று வம்பு தும்பாக பேசி சிக்கலில் கிக்கிகொண்டார். கிறிஸ்தவ சமூகத்தினரை பற்றி தவறாக அவர்கள் கருத்து பகிர்ந்ததாக பரபரப்பான புகார் எழுந்தது. அதன் பேரில் பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பேசும்போது காமெடியாக பேசிய ரவீணா வம்பு வழக்கு என்றதும் திகில் ஆகிவிட்டார்.
தற்போது அதற்கு டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். தான் பங்கேற்ற காமெடி நிகழ்ச்சியின் வீடியோவை அத்துடன் இணைந்திருக்கிறார்.
'நான் இணைத்திருக்கும் காமெடி ஷோ நிகழ்ச்சி வீடியோவை முழுவதுமாக நீங்கள் பார்த்தால் மத உணர்வை புண்படுத்தும் விதமாக நான் பேச வில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. அப்படியொரு தவறு நடந்திருக்கிறது என்று கருதினால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்திருக்கிறார்.