படம் பார்க்க பறந்து வந்த பரவை முனியம்மா.. உடல் நலம் தேறியதால் தெம்பு..

by Chandru, Feb 8, 2020, 17:43 PM IST

தூள், ஜெய்சூர்யா, கோவில், சூப்பர்டா, கண்ணாடி பூக்கள் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சொந்த குரலில் பாடல்களும் பாடியிருப்பவர் பரவை முனியாம்மா. 76 வயதாகும் அவர் உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து படங்கள் நடிப்பதிலிருந்து விலகினார். மதுரை சென்று அங்கேயே வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவை முனியம்மாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சீரியஸாக அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக வதந்தியும் பரவியது. ஆனால் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நேரில் சென்று  சந்தித்து உறுதி செய்தார் நடிகர் அபி சரவணன். அன்றுமுதல் அவருக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தார்.   உடல்நிலை சரியாகும் வரை அவரை கவனித்து கொண்டார். பிறகு முனியம்மா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். 

இந்நிலையில் கடந்த வாரம் அபி சரவணன் - வெண்பா இணைந்து நடித்த மாயநதி என்ற படம் திரைக்கு வந்தது.

இதனை கேள்விப்பட்ட  பரவை முனியம்மா, மாயநதி படத்தை அபி சரவணன்  குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில்  உள்ள தியேட்டரில் சென்று பார்த்தார்.
பின்னர் அவர் கூறும்போது,'நீண்ட  நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது' என்றார். மேலும் மாயநதி படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக  அபி சரவணனுக்கு பாராட்டு  தெரிவித்தார் பரவை முனியம்மா.


Leave a reply