வேதாளம், 10 எண்றத்துக்குள்ள, நரசிம்மா, ஜெய்ஹிந்த், பரசு ராம், முனி என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ்.
ஆஜானபாகு தோற்றத்துடன் அவர் ஹீரோக்களுடன் மோதும்போது ஆக்ஷன் காட்சியே கதிகலங்கும். சீனியர் வில்லனாகிவிட்ட நிலையில் தற்போது அவர் காதல் ரோமியோவாக மாறியிருக்கிறார். தன்னைவிட 14 வயது குறைந்த அழகு நடிகைக்குக் காதல் வலை வீசி மயக்கி தற்போது கல்யாணம் வரை விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமிக்குக் காதலியாக நடித்திருப்பவர் முக்தா கோட்சே. இவரைத்தான் காதல் வலையில் வளைத்துப்போட்டிருக்கிறார் ராகுல்.
ராகுலுக்கு ஏற்கனவே ரினா என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் 2009ம் ஆண்டு ரினா நோய் பாதிக்கப் பட்டு மரணம் அடைந்தார். மறுமணம் பற்றி எண்ணாமலிருந்த ராகுல்தான் தற்போது மறுமணத்துக்கு தயாராகியிருக்கிறார்.
இதுபற்றி ராகுல்தேவ் கூறும்போது,'திருமண விழா ஒன்றில் முக்தாவைச் சந்தித்தேன் இருவரும் நண்பர்களாகப் பழகினோம். பின்னர் காதலர்களாகி விட்டோம். இந்த விஷயம் எனது மனைவியின் குடும்பத்தினருக்கு தெரியும். எங்களுக்கு வயது வித்தியாசம் இருக்கிறதே என்கிறார்கள். அதனால் என்ன பிரச்சினை? ஒற்றுமையாக அன்போடு இணைந்து வாழ்வதில்தான் சந்தோஷம்
இருக்கிறது' எனக் கூறினார்.
காதலை ராகுல் உறுதி செய்தாலும் இப்போதே முக்தாவுடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து தான் வருகிறாராம்.