27ம் தேதி முதல் படங்களை வெளியிட மாட்டோம்.. டி.ராஜேந்தர் பங்கேற்ற வினியோகஸ்தர் கூட்டத்தில் முடிவு..

by Chandru, Mar 11, 2020, 13:18 PM IST

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:



வினியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப் படும் 10 சதவீத டிடிஎஸ் வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி முதல் எந்த வினியோகஸ்தரும் படங்களை விநியோகிப்ப தில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு வினியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.

தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீத வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்பிடி 8 சதவீத கேளிக்கை வரி செலுத்துவதால் திரையரங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி 8 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்யத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க உபதலைவர் பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித் மற்றும் தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You'r reading 27ம் தேதி முதல் படங்களை வெளியிட மாட்டோம்.. டி.ராஜேந்தர் பங்கேற்ற வினியோகஸ்தர் கூட்டத்தில் முடிவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை