அட்டகத்தி, காக்கா முட்டை படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்ததுடன் உடல் எடையும் கூடியிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இளம் ஹீரோக்களுக்கு ஜோடி யாக நடிக்கத் தொடங்கினார்.
முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரை தங்கை வேடத்தில் நடிக்கத் தூண்டியது. மணிரத்னம் தயாரித்த வானம் கொட்டட்டும் படத்தில் விக்ரம் பிரபு தங்கையாக நடித்தார். பின்னர் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்தார்.
சிபிராஜ் உள்ளிட்ட இளம் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென்று இரண்டு படங்களில் தங்கை வேடத்தில் நடித்தது அவருக்கு மைனஸ் ஆக அமைந்துவிட்டது. தங்கையாக நடித்த வகையில் அவரது நடிப்புக்குப் பாராட்டு கிடைத்தாலும் அடுத்தடுத்து வரும் படங்களும் ஹீரோக்களின் தங்கையாக நடிக்கவே வருகிறதாம். இதில் கடுப்பாகிப் போன ஐஸ்வர்யா இனிமேல் ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக சக தோழிகளிடம் கூறி வருகிறார்.