விஜயகாந்த்துடன் எங்கள் அண்ணா, சரத்குமாருடன் ஏய், சத்யராஜுடன் இங்கிலீஷ்காரன் மற்றும் கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, அஜீத் நடித்த பில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நமீதா. இவருக்கு இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பதுடன், ஆபாச மெசேஜ்களும் அனுப்பி உள்ளார். அதைக் கண்டு உர்ரான நமீதா சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திருக்கிறார்.
'டிஎம் என்ற ஒருவர் தன்னை செந்தமிழ் என்ற பெயரிட்டுக் கொண்டு சின்னப்புத்தியுடன் இணைய தளத்தில் என்னை வம்பிழுத்திருக்கிறார். என்னைப் பற்றி ஐட்டம் என்று குறிப்பிட்டிருப்பதுடன், எனது ஆபாசப் படத்தை பார்த்ததாகவும் அதை ஆன்லைனில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். ஆபாசப் படத்தை வெளியிடு பார்ப்போம் என்றபடி அவரிடம் தொடர்பு கொண்டுகேட்டபோது தனது இணைய தள அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.
இப்படிப்பட்டவர்கள் தோல்வி அடைந்தவர்கள். தங்கள் முகத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள். பெண் களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பதால் என்னைப் பற்றி இப்படிக் குறிப்பிடும் தைரியம் அந்த நபருக்கு வந்திருக்கிறது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது நேர்மையான மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியும். என்னைப் பற்றிய தவறான பதிவைக் கண்டு நான் அமைதியாக இருப்பதால் அதை எனது பலவீனம் என்று எண்ண வேண்டாம். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார் நமீதா.