பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தை இயக்கிய வெளியிட்ட ராஜமவுலி அப்படங்கள் வெளியாகி ஒரு வருடத்துக்கு மேலாக புதிய ஸ்கிரிப்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதுவும் சரித்திர பின்னணி கொண்ட படமாக இயக்க எண்ணினார் . ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீத்தாராம ராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைத் தழுவி இக்கதை அமைக்கப் பட்டிருக்கிறது.
ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து நடிக்கின்றனர். ராம் சரண் ஜோடியாகப் பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். படப்பிடிப்பு இடைவெளிவிட்டு நடந்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் ராம் சரண், ஜூனியர் என்டிஆர். அலியா பட் நடிக்கும் முக்கிய காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென்று ஏற்பட்ட கொரேனா வைரஸ் பீதி எல்லாவற்றையும் திருப்பி போட்டிருக்கிறது.
கொரோனா பீதியால் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட எந்த படப்பிடிப்பும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. சுயதனிமைமயத்தால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. இதனால் அலியாபட் தந்திருந்த கால்ஷீட் முடிவடைந்துவிடுவதால் பிறகு கால்ஷீட் பிரச்சினை ஏற்படும் என்றும் இதையடுத்து ராஜமவுலி படத்திலிருந்து அவர் விலக உள்ள தாக நெட்டில் தகவல் வெளியானது. ஆனால் இதனைப் படக் குழு மறுத்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க அலியாபட் ஆர்வமுடன் இருக்கிறார். சீதா என்ற கதாபாத்திரத்தில் ராம் சரண் ஜோடி யாக அவர் நடிக்கிறார். ஏப்ரல் அல்லது மே மாதம் அவரது காட்சிகள் படமாக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது' எனப் படத் தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக இப்படத்தில் ஜூனியர் என் டிஆர் ஜோடியாக நடிக்க ஹாலிவுட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட டெய்சி எட்கர் ஜோன்ஸ் படத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.