அதிர்ச்சி : நடிகர் சேது மாரடைப்பில் மரணம்

by Chandru, Mar 27, 2020, 09:50 AM IST

சந்தானம் நண்பர் மற்றும் டாக்டர்..

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் சேது. நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் சேதுவை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் சந்தானம். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றத் தந்தது. வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தார். தோல் சிகிச்சை டாக்டரான இவர் வெளிநாடு சென்று லேசர்முறையில் தோல் சிகிச்சை மற்றும் உடல் அழகு அறுவை சிகிச்சை பயிற்சி பெற்றார். சென்னையில் மருத்துவமனை ஒன்றையும் சேது தொடங்கினார். சில நடிகைகள் அவரிடம் அழகு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் சேது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 36.

இளம் வயதிலேயே நடிப்பு, மருத்துவ துறையில் சிறந்த விளங்கிய சேதுவின் திடீர் மரணம் திரையுலகினரையும், மருத்துவ துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு திரையுலகினர், டாக்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கடந்த 2013ம் ஆண்டே கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் சேது அறிமுகமாகியிருந்தாலும் அதன்பிறகு படிப்பதற்காக வெளிநாடு சென்று விட்டார். ஒரு வருடத்தில் திரும்பி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். அதன்பிறகு மீண்டு வந்து 3 வருடங்களுக்கு பின்னர் அதாவது 2016ம் ஆண்டு வாலிப ராஜா என்ற படம் உள்ளிட்ட மேலும் 2 படங்களில் நடித்தார். கடந்த 2016ம் ஆண்டு சேதுவுக்கு உமா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.


Leave a reply