கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றும் போலீசார், டாக்டர்கள், நர்ஸ் ஆகியோரின் சேவையைப் பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத அதை காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். அந்த பாடல் இதோ :
உழைக்கும் கடவுள்களே
உங்களுக்கெல்லாம் நன்றி
அழைக்கும் வேளையிலே – எங்கள்
ஆரூயிர் காப்பீரே – உங்கள்
அத்தனை பேர்க்கும் நன்றி
இதயத்திலிருந்து
சொற்கள் எடுத்து
எடுத்த சொற்களைத்
தேனில் நனைத்து...
வாரி வழங்குகின்றோம் – உம்மை
வணங்கி மகிழுகின்றோம்
*
மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் மறக்கும்
மானுடக் கடவுள் மருத்துவர்கள்
தேவை அறிந்து சேவை புரியும்
தேவதை மார்கள் செவிலியர்கள்
பயிரைக் காக்கும் வேர்கள் போல
உயிரைக் காக்கும் ஊழியர்கள்
வெயிலைத் தாங்கும் விருட்சம் போல
வீதியில் நிற்கும் காவலர்கள்
தூய்மைப் பணியில் வேர்வை வழியத்
தொண்டு நடத்தும் ஏவலர்கள்
வணக்கமய்யா வணக்கம் – எங்கள்
வாழ்க்கை உங்களால் நடக்கும் – உங்கள்
தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே
தேசியக் கொடியும் பறக்கும்