ஓ டி டி பிளாட்பார்மில் டிஜிட்டலில் படங்களை வெளியிடுவது குறித்த பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் தயாரிப்பாளர் என் ராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:தமிழ்த் திரைப்படங்களை டிஜிட்டலில் வெளியிடும் முறைக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
கொரோனாவின் கோரதாண்டவத்தில் உலகமே சிக்கி தவிக்கையில் திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து படத்தைத் தயாரித்து அதை விளம்பரம் செய்ய முடியாமல் தவிக்கும்போது ஓடி டி பிளாட்பாரம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகிறது. பெரிய படங்களுக்குத் திரையரங்குகள் எப்படி அதிகமாகக் கிடைக்கிறதோ அதேபோல் ஒ டி டியில் வெளியிடப் பெரிய படங்களை மட்டும் தான் விற்க முடிகிறது. சிறு முதலீட்டுப் படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில்லை. டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரேட் முறையில் விற்க முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
நம் சங்க உறுப்பினர்களுக்காக பேச வேண்டியவர்கள் தங்கள் பதவியை வைத்துதான், தன்னைச் சார்ந்தவர்களுடைய பெரிய, சிறிய, மிகச்சிறிய என எல்லா படங்களையும் அவுட் ரேட்டாக விற்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் அவர்களுக்கு அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உதவி செய்ய, குரல் கொடுக்க சிறு படத் தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் இவர்கள் படங்களை விற்கிறபோது கூடவே ஐந்து சிறு படத் தயாரிப்பாளரின் படங்களையும் விற்றுத் தர ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இது என்ன நியாயம்? இதற்கு என்னதான் முடிவு? ஒரு சிலர் ஒன்றாகச் சேர்ந்து தன்னிச்சையாக முடிவு எடுத்து வெளியிடும் அறிக்கை பல தயாரிப்பாளர்களுக்கும் சாதகமாக அமைய வேண்டுமே தவிரச் சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது.
ஆகவே அனைத்து தயாரிப்பாளர்களையும் கலந்து பேசி நாம் ஒரே குரலாக ஒலித்து இருக்க வேண்டும். அவசர கதியில் சிறு படத் தயாரிப்பாளர்கள் பெரிய படத் தயாரிப்பாளர்கள் என அனைவரது கருத்தையும் கேட்காமல் ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அனைத்து தயாரிப்பாளரின் கருத்தாக ஒலிப்பது தவறு. இப்போது எடுக்கப் படும் முடிவு என்பது இனி வரும் காலங்களில் சிறிய படங்களை விற்பனை செய்வது என்பது சுலபமானதாக மாற வேண்டும். இந்த ஓடி டி வியாபாரத்தை முறைப்படுத்தி வியாபார முறைக்குக் கொண்டு வர வேண்டும். அதாவது எந்த ஒரு நிறுவனம் டிஜிட்டல் வெளியீட்டிற்காக பெரிய பட்ஜெட் படம் ஒன்றை வாங்குகிறதோ அந்த நிறுவனம் ஐந்து சிறு முதலீட்டு படங்களைக் கண்டிப் பாக வாங்க வேண்டும். அதனை அந்த பெரிய படத் தை விற்கும் தயாரிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். என்று ஒரு வரைமுறையைக் கொண்டுவர வேண்டும். அதற்குப் பெரிய தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இதனை நம் சங்கத்தின் மூலம் நடை முறைப்படுத்தக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
இதற்குத் தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் வருடத்திற்கு 25 பெரிய படங்கள் வியாபாரமானால் 125 சிறிய படங்கள் சிரமமில்லாமல் வியாபாரம் ஆகும். இது இப்போது மட்டுமில்லாமல் வருங்காலத்திலும் சிறிய படங்களை வியாபார ரீதியாக வெற்றி பெறச் செய்ய வழிவகுக்கும் எந்த ஒரு பிரச்சனையிலும் பெரிய படத் தயாரிப்பாளருக்கு மட்டுமே போராடும் நாம், சிறு படத் தயாரிப்பாளர்களையும் கருத்தில் கொண்டு அவர்களும் நன்மை அடையக் கூடிய முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். பெரிய, சிறிய என்ற பாகுபாடுபாராமல் டிஜிட்டல் பிளாட்பாரத்தில் வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டிய தருணம். நீங்களும் வாழுங்கள் சிறு படத் தயாரிப்பாளர்களையும் வாழ விடுங்கள்.
இந்த நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களின் சுமையை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் ஒன்றுகூடிப் பேசி ஒரு சுமூகமான வியாபார சூழ்நிலை யை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் தயாரிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான கம்ப்யூட்டரைஸ்டு டிக்கெட் முறையை அனைத்து திரையரங்குகளிலும் அறிமுகப்படுத்தி வியாபாரத்தின் வெளிப்படைத்தன்மையைத் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு முரளி ராமநாராயணன் கூறியுள்ளார்.