பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கிலப் படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஒரு வருட சிகிச்சைக்குப் பிறகு அவர் மும்பை திரும்பியதுடன் ஆங்கிரிஸி மீடியம் என்ற படத்திலும் நடித்தார்.
இந்நிலையில் நேற்று இர்பானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் உள்ள அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை இர்பான் கான் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54.இர்பான் கான் மன தைரியமும். தன்னம்பிக்கையும் அதிகம் கொண்டவர். கடந்த வருடம் அவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டபோது கூட அதிலிருந்து மீண்டு வந்து சந்திப்பேன் என்று ரசிகர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்படி சிகிச்சை முடிந்து அவர் மும்பை திரும்பி மீண்டும் படப் பிடிப்பில் கலந்துகொண்டார், அதேபோல் இம்முறையும் அவர் மீண்டு வருவார் என்று அவரது நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு இம்முறை நிறைவேறாத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்தான் இர்பான் தாயார் அவரது சொந்த ஊரில் மரணம் அடைந்தார் . கொரோனா ஊரடங்கால் தாயார் இறுதி சடங்கில் நேரில் பங்கேற்க முடியவில்லை. வீடியோ மூலமே இறுதி சடங்குகளை கண்டு கண் கலங்கி இறுதி அஞ்சலி செலுத்தினார் இர்பான் கான். தாய் இறந்த ஒரு சில தினங்களில் இர்பானும் இறந்திருப்பது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது . இர்பானுக்கு சுதப்பா தேவேந்திர சிக்தர் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இர்பான்மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.