பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் 123 படங்களில் நடித்திருக்கிறார். 67 வயதில் இன்று மரணம் அடைந்த அவரது வாழ்க்கை குறிப்பு வருமாறு: ரிஷிகபூர் 1952 ஆண்டு மும்பையில் பிறந்தார். சிறுவயதிலேயே நடிக்க வந்தார். 1970 ஆண்டு மேரே நாம் ஜோகர் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் பெற்றார். ஹீரோவாக 1973ம் ஆண்டு வெளியான பாபி படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா நடித்தார். இப்படத்தில் ரிஷி கபூர் அணிந்த உடைகள் பிரபலம் ஆனது. சட்டையில் காலர்கள் பாபி காலர் ஸ்டைலில் ரசிகர்கள் தைத்துக்கொண்டனர். இப்படத்திற்காக அவருக்குச் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. சுமார் 92 படங்களில் காதல் நாயகனாகவே நடித்தார்.
கேல் கேல் மைன், கபி கபி, அமர் அக்பர் அந்தோனி, சாந்தினி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது. 2009 ம் ஆண்டு லவ் ஆஜ் கல் படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்தார். அக்னிபத், முல்க், டு டூமி ச்சார் என அவரது படங்கள் மாறுபட்ட வேடங்களில் ரிஷிகபூரை ரசிகர்களுக்கு கண்முன் நிறுத்தியது. இறுதி காலகட்டங்களிலும் அவர் நடிப்பைக் கைவிடவில்லை 2018ம் ஆண்டு அமிதாப்பச்சனுடன் இணைந்து 102 நாட் அவுட் படத்தில் நடித்தார். தொடர்ந்து முல்க், ரஞ்மா சவால், ஜோதா கஹின் கா, தி பாடி ஆகிய படங்களில் நடித்தார். அவரது கடைசி படமாக தி பாடி படம் அமைந்துவிட்டது.
அப் அப் லவுட் சஹலென் என்ற படத்தை இயக்கியும் உள்ளார் ரிஷி கபூர்.
ரிஷிகபூர் நடிகை நீத்து சிங்கை காதலித்து மணந்தார். இருவரும் பல்வேறு படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். ரன்பீர் கபூர், ரித்திமா என ஒரு மகன். மகள் உள்ளனர். ரித்திமாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ரன்பீர் கபூர் இந்தியில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ரிஷி கபூரின் சகோதரர் மறைந்த சசிகபூரும் ஏராளமான படங்களில் நடித்தவர் ஆவார். இவர்களது தந்தை ராஜ் கபூர் பெரும் தயாரிப்பாளர், இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாலிவுட் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கபூர் குடும்பம் கோலோச்சியது .