கொரோனா ஊரடங்கு ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்கி கொண்டிருக்கிறது. அடுத்து என்ன என்ற ஊகிக்க முடியாத நிலையில், தயாரிப்பாளர்களின் நலன் கருதி தாராள பிரபு பட ஹீரோ நடிகர் ஹரீஷ் கல்யாண் தன் ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து ஹரீஷ் கல்யாண் கூறும் போது,கோவிட் 19 என்ற பெருந்தொற்று நோய் அனைத்து தொழில்களையும் முடக்கிப் போட்டதுடன், அனைவரையும் இருண்ட நிலையில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக 'ஷோபிஸ்' என்று சொல்லப்படும் இந்த திரைப்படத்துறை மிகப் பெரும் மூலதனத்துடன் செயல்பட்டாலும், எதிர்பாராத இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் அடுத்து நான் நடிக்கும் படங்களுக்கு எனது ஊதியத்தில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்வதென முடிவு செய்திருக்கிறேன். இந்த கஷ்டமான காலகட்டத்தில் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்று ஒருங்கிணைந்து, இந்தக் கடும் புயலை வலிமையுடன் எதிர் கொண்டு கரை சேர வேண்டும். இந்த நிலை விரைவில் மாறி, திரைத்துறை முன்பு போல் மீண்டும் செயல்படும் என்று நம்புவதுடன் அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள் பாதுகாப்புடன் இருங்கள்” என்றார்.