தமிழ்த் திரைப்பட துறையில் வரும் 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி தமிழக அரசு அளித்திருக்கிறது. அப்போது மத்திய, மாநில அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அனுமதி அளித்த முதல்வர் மற்றும் அமைச்சருக்குத் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்கே செல்வமணி நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் மேற்கொள்ளும் போது தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும். தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் அரசு விடுத்துள்ள நிபந்தனைகளை நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும் முக கவசம், கையுறை, பணிபுரியும் இடங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல் தெரியாத நபர்களை அனுமதிக்காமல் இருத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு தயாரிப்பாளர்களையும் தொழிலாளர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
யாராவது ஒருவர் தவறு செய்து தொற்று ஏற்படும் அபாயம் அமைந்தால் இந்த அனுமதி ரத்து செய்யப்படக் கூடிய சூழல் அமையும் என்பதை அனைவரும் நன்கு உணர்ந்து தமிழக அரசு விடுத்துள்ள விதிமுறைகளைக் கண்டிப்பாக நிறைவேற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் எங்கள் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்த் திரைப்படத் துறைக்கும் சின்னதிரைக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கு, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு ஆர்.கே செல்வமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.