கிரிக்கெட் விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு கபீர் கான் இயக்கத்தில் உருவாகும் '83' திரைப்படம், ஆச்சரியப்படத்தக்க முறையில், 1983ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடிய உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது. ஆனால் இப்போட்டியின் போது தகுதி சுற்றுக்கு முன்பே நாடு திரும்ப இந்திய அணி டிக்கெட் எடுத்த ரகசியம் வெளியாகி உள்ளது.
1983 உலகக் கோப்பைக்கான பயணத்தில் நடந்த பல சுவையான மற்றும் உண்மைச் சம்பவங்களையும் விவரிக்கிறது 83. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜூன் 20ஆம் தேதி வரை என்றும், அரை இறுதிச் சுற்று 22ஆம் தேதி எனவும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதற்கான பயணச் சீட்டுகள் இந்தத் தேதிகளுக்கு முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தன.
போட்டிகளில் விளையாடி விட்டு ஜூன் 20ஆம் தேதி இரவு நியூயார்க் செல்ல இந்திய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பயணச்சீட்டு பதிவு செய்திருந்தனர். அப்போதுதான் திருமணப் பந்தத்தில் நுழைந்த இவர்களில் சிலர் தங்கள் மனைவிகளுடன் இந்த வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுவரை வரும் என்று யாருமே எதிர்பார்க்க வில்லை. ஏன் இந்திய அணியினரே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெகு சிறப்பாக விளையாடியதுடன், கிரிக்கெட் சரித்திரத்திலும் இடம் பெற்று விட்டது.
1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, விளையாட்டுக்கான உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு இடமே இல்லை என்ற நிலைதான் காணப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியா வெகு சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடி சரித்திரத்தில் இடம் பிடித்தது. அணித் தலைவர் கபில்தேவ்வை அணியில் உள்ளவர்கள் செல்லமாக கபில் டெவில் என்று அழைத்ததையும், இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற அனுபவத்தையும் வெண்திரையில் வெளியாகும் '83' திரைப்படத்தில் கண்டு மகிழலாம்.
கபீர்கான் பிலிம்ஸ் தயாரிக்கும்'83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது. தீபிகா படுகோன், கபீர் கான், விஷ்ணுவர்தன் இந்தூரி, சஜீத் நாடியாவாலா, ஃபாண்டம் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர் டெயிண்மெண்ட் மற்றும் 83 பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் '83' திரைப்படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மெண்ட் மற்றும் பி.வி.ஆர். நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.
விளையாட்டை விறுவிறுப்பான திரைக் காவியமாக்கியிருக்கும் '83' படத்தைக் காணத் தயாராக இருங்கள். கபில்தேவாக ரன்வீர்சிங். ஸ்ரீகாந்தாக ஜீவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.