கொரோனா வைரஸ் ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீடிக்கும் நிலையில் தமிழ் நாட்டில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியாமல் அதிமுக அரசு திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் சில தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைக்கும் தளர்வு அளித்துக் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐகோர்ட்டில்பொது நல வழக்கு தொடரப்பட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மதுக் கடைகள் திறக்க ஐகோர்ட் அனுமதி வழங்கியது. அதன்படி மதுக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது விற்பனையானது. ஆனால் ஐகோர்ட் விதித்த கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாகக் கூறி மறு நாளே மதுக் கடைகளை மூட கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி அரசு அப்பீல் செய்திருக்கிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்!தயவு கூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளைப் பாருங்கள் என ரஜினிகாந்த் ரத்தினச் சுருக்கமாகத் தனது எதிர்ப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.