மலையாளத்தில் பலகுரல் மன்னர்களாக இருந்து பின்னர் நடிகர் ஆனவர்கள் ஜெயராம். கலாபவன் மணி போன்றவர்கள். அதுபோல் பல குரலில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் கலாபவன் ஜயேஷ். இவருக்கு மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முல்லா, பாசஞ்சர், சால்ட் அண்ட் பெப்பர், சுதி வத்மீகம், பிரேதம்-2 , கிரேசி கோபாலன், எல்சம்மா என்ன ஆண்குட்டி போன்ற பல காமெடி வேடங்களில் நடித்தார். டிவியிலும் காமெடி ஷோ நடத்தி வந்தார்.
வெளியில் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த ஜயேசுக்கு புற்றுநோய் பாதிப்பு அவரது உடலை உள்ளிருந்து வாட்டி எடுத்தது. திருச்சூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் கலாபவன் ஜயேஷ் உயிரிழந்தார்.
44 வயதாகும் கலாபவன் ஜயேசுக்கு, சுனஜா என்ற மனைவி, சிவானி என்ற மகள். ஜயேஷ் மறைவிற்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 வருடத்துக்கு முன்புதான் ஜேயேஷின் 5 வயது மகன் சித்தார்த் மரணம் அடைந்தார். அந்த சோகவடு மறைவதற்குள் மற்றொரு சோகம் அக்குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.