கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'காப்பான் இப்படத்தின் கிளைமாக்ஸ்
காட்சியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறந்து வந்து விவசாயிகளின் பயிர்களை அழிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதே போன்ற சம்பவத்தை தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் எதிர்கொண்டிருக்கிறது.பல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் பறந்து வந்து கோதுமை உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதுவரை, 50ஆயிரம் ஹெக்டேர் பயிர்களை அவை அழித்துள்ளன. பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் பணியில் அம்மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனாலும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகின்றன.
வெட்டுக்கிளிகள் நடத்தும் இந்த உணவு பேரழிவு குறித்துக் கடந்த ஆண்டு இயக்குனர் கே.வி.ஆனந்த் காப்பான் என்ற படம் இயக்கி இருந்தார். இதில் சூர்யா ஹீரோவாக நடித்தார். தற்போது இப்படம் மீண்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்படியொரு கதை அம்சத்துடன் படம் இயக்கியது பற்றி கே. வி ஆனந்திடம் கேட்டபோது பதில் அளித்தார்.
இப்படி ஒரு சம்பவம் நூற்றாண்டுக்கு முன்பே நடந்திருக்கிறது. 1903லிருந்து 1906 வரை மும்பையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. வரலாறு எப்போதும் திரும்பும். இதே போன்ற சம்பவங்கள் குறித்து பைபிள் குரானில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
9 வருடங்களுக்கு முன் மாற்றான் படத்திற்கு லொகேஷன் பார்க்க மடகாஸ்கர் சென்றேன். அங்கு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று வெட்டுக்கிளிகள் கூட்டம் காரை மூழ்கடித்துப் பறந்து சென்றது. அவை முழுவதாக பறந்து செல்ல நீண்ட நேரம் ஆனது. அதுவரை காரை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. பின்னர் அது பற்றிப் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டேன். அப்போது பல விவரங்களைச் சேகரித்தேன். பின்னர் அதை மையமாக வைத்துக் காப்பான் படம் கதை அமைக்கப்பட்டது.
இவ்வாறு கே.வி. ஆனந்த் கூறினார்.