சீயான் விக்ரம் தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்து தொடங்கவுள்ளது. சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார்.
முதன் முறையாகத் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். 'ஆதித்யா வர்மா' படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கலங்கடித்த துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் 'பேட்ட' என்ற பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தவர், இப்போது சீயானுடன் இணைந்து அடுத்த வெற்றியைக் கொடுக்க களமிறங்குகிறார்.
'பீட்சா' தொடங்கி தற்போது முடித்துள்ள 'ஜகமே தந்திரம்' வரை ஒவ்வொரு படமுமே வித்தியாசமான கதைக்களங்களில் அமைந்தவை. அதுபோல் 'சீயான் 60' படமும் வித்தியாசமான கதைக்களமாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் இருக்கும் என் எதிர்பார்க்கலாம்விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் - துருவ் விக்ரம் இணையும் இக்கூட்டணியுடன் அனிருத் கைகோர்க்கிறார். அனிருத் இசை அமைக்கும் பொறுப்பு ஏற்றது இளைஞர்களை உற்சாகமாக்கியிருப்பதுடன் படத்துக்குக் கூடுதல் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சீயான் 60' படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் 'மாஸ்டர்' தயாராகி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டு வருகிறார். மேலும் 'கோப்ரா', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சீயான் 60' படத்தைத் தயாரிக்கவுள்ளார். தரமான படங்களைத் தயாரித்தும் வெளியிட்டும் வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான வளர்ந்து வருகிறது. 2021ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டில் சீயான் 60 வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.