மகாநதி (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய திரைப்பட விருது பெற்றார். அதுபோல் ஆழமான மற்றொரு வேடத்தை பெண்குயின் படத்தில் ஏற்றிருக்கிறார்.கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கக் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்திருக்கின்றனர். புது இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் நடித்தது பற்றி கீர்த்தி கூறியதாவது:நான் பணியாற்றிய படங்களில் மிகவும் சுவாரசியமான சிறந்த படமாக பெண்குயின் இருக்கும். ரிதம், ஒரு தாயாக, மென்மையானவளாக, அக்கறை உள்ளவளாக, ஆனால், துணிச்சலான பெண்மணி. அவள் குழப்பமானவள், ஆனால் உறுதியானவள். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவரும். கதைக்கு உயிர் கொடுக்கும் இயக்குனரான ஈஸ்வர் கார்த்திக்குடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. உலகெங்கிலும் பார்வையாளர்களால் பாராட்டப்படும் ஒரு படத்தைத் தமிழ், தெலுங்கில் பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கும். உலக அளவில் வளர்ந்து வரும் பிரைம் வீடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு கீர்த்தி கூறினார். இப்படத்தின் டிரெய்லரை மோகன்லால், தனுஷ் மற்றும் நானி வெளியிட்டனர். அமேசான் பிரைம் வீடியோவில் ஜுன் 19 அன்று பிரத்யேக உலக பிரிமீயருக்காக தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருகிறது. அமேசான் பிரைம் வீடியோ உலக அளவில் ஐந்து மொழிகளில் வெளியிடும் 7 படங்களின் வரிசையில் மூன்றாவதாக வெளியாக உள்ள படம் பெண்குயின். உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்கலாம்.