தேவர்மகன் ஸ்கிரிப்ட்டை 7 நாளில் எழுதித் தர முடியுமா என்று கமலுக்கு அவரது நண்பர் சவால் விட்ட ரகசியம் அம்பலமாகி இருக்கிறது.இதுபற்றி கமல்ஹாசன் கூறியதாவது:
தேவர் மகன் படத்தின் போது எனது நண்பரால் எனக்கு ஒரு சவால் விடப்பட்டது. ஸ்கிரிப்ட்டை ஏழு நாட்களில் எழுதிக்கொடு அல்லது படத்திலிருந்து விலகுகிறேன் என்று மிரட்டினார். அந்த நேரத்தில் அது ஒரு பிரஷராக அமைந்தது மட்டுமல்ல குழந்தைத் தனமான விளையாட்டாக இருந்தது. 7 நாட்களில் ஸ்கிரிப்ட் எழுதி கையில் தருகிறேன் என்றேன். அப்படியே 7 நாட்களில் ஸ்கிரிப்ட் எழுதி கையில் கொடுத்து விட்டேன்.
எல்லா ஸ்கிரிப்ட்டையும் உன்னால் 7 நாளில் எழுத முடியுமா என்றால் அது என்னால் முடியாத காரியம். சில ஸ்கிரிப்ட்கள் ஒரு வருடம் ஆகும். இன்னும் சில 30 மாதம் ஆகும். சில ஸ்கிரிப்ட் சில மாதங்களில் ரெடியாகிவிடும். சூட்கேஸ் நிறை பணம் அடுக்கி நிறைய சூட்கேஸ்கள் கொடுத்தாலும் என்னை அந்த பிரஷருக்குள் தள்ள முடியாது என்றார்.
கமல்ஹாசன் கடந்த ஆண்டே தேவர் மகன் 2ம் பாக படப்பிடிப்புக்காகப் பொள்ளாச்சி செல்லவிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் திடீரென்று ஷங்கர் இயக்கும் இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நின்றிருக்கும் நிலையில் தேவர்மகன் 2ம் பாகமான தலைவன் இருக்கிறான் படத்தின் பணியைக் கையிலெடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன். நாசர், வடிவேலு, ரேவதி, கவுதமி நடித்திருந்தனர். தலைவன் இருக்கிறான் படத்தில் கமல்ஹாசன். விஜய் சேதுபதி. வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதியாகி உள்ளது. மற்ற நட்சத்திர தேர்வுகள் நடந்து வருகின்றன.