சாத்தான்குளம் போலீஸ் அத்துமீறலுக்கு கடும் தண்டனை தரவேண்டும்.. நடிகர் சூர்யா கோப அறிக்கை..

Actor Surya Condem and Demand Justice for Sathankulam lockup death

by Chandru, Jun 28, 2020, 11:16 AM IST

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் என இரண்டு பேரை போலீஸார் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்குக் கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவுக்கு நிகழ்ந்த போலீசாரின் லாக்கப் அத்துமீறல் காவல்துறையின் மாண்பைக் குறைக்கும் செயல்.

இது ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது.
போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பினிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து நலமாக இருப்பதாகச் சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்த்திரேட் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பரிசோதிக்காமல் இயந்திர கதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள் ஒரு குடிமகனின் உரிமையில் நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதனால் இது போன்ற துயர மரணங்கள் ஒரு வகையான திட்டமிடப்பட்ட குற்றமாக நடக்கிறது.

ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால் போலீசாரின் இந்த கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமல் இருக்கும் போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கான வாழும் சாட்சியாக இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. இந்த கொடூர மரணத்தில் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்கிற நம்பிக்கையை அரசாங்கமும் நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக நமது அதிகார அமைப்புகள் அவநம்பிக்கை ஏற்படுகின்றன. இரண்டு அப்பாவியின் மரணத்திற்கு பிறகும் உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கையைச் சம்பந்தப்பட்ட போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது மட்டுமே ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது தண்டனையாகப் பொதுமக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது. இரண்டு உயிர் போவதற்குக் காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா என்று எழுந்த விமர்சனத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையைச் செய்கின்ற பலரைத் தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டுமொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். கொரோனா யுத்தத்தில் காலத்தில் முன் வரிசையில் நிற்கிற காவல் துறையினருக்குத் தலை வணங்குகிறேன். அதேநேரம் அதிகாரத்தை பொது மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகாரத்தை மீறி வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும் அக்கறையும் கொண்டு கடமையைச் செய்கிற காவல்துறையினரே மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும் மகனையும் இழந்து வாடுகிற அந்தக் குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கு எடுத்துக் கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க தேவையான மாற்றங்கள் சீர்திருத்தங்களை அரசும் நீதிமன்றமும் பொறுப்புமிக்க காவல் அதிகாரியும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்கள் அதற்குத் துணை போனவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்று பொது மக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்
இவ்வாறு நடிகர் சூர்யா அறிக்கையில் கூறியுள்ளார்.

You'r reading சாத்தான்குளம் போலீஸ் அத்துமீறலுக்கு கடும் தண்டனை தரவேண்டும்.. நடிகர் சூர்யா கோப அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை