சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முரட்டுக் காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்திருப்பவர் சுமலதா. இவர் கன்னட நடிகர் மறைந்த அம்பரீஷ் மனைவி. மாண்டியா தொகுதி எம்.பியாக இருக்கிறார். இவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிந்தது. இதையடுத்து பெங்களூருவில் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சுமலதாவுக்கு தற்போது 56 வயது ஆகிறது.
கொரோனா தொற்று பற்றி அவர் கூறும் போது, நான் கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்குத் தொற்றுக்கான அறிகுறி தென் பட்டது. இதையடுத்து என் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறேன். கடவுள் அருளால் எனது உடம்பில் எதிர்ப்புச் சக்தி அதிகமிருக்கிறது. உங்கள் ஆதரவால் நான் விரைவில் குணம் அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னைத் தொடர்பு கொள்ள விரும்புவர்கள் நான் நியமிக்கும் நபர் மூலம் தகவல் தெரிவிக்கலாம் அதற்கான விவரங்களை நான் தருகிறேன் என்றார் சுமலதா.சுமலதாவுக்கு தலைவலியும், தொண்டை வலியும் உண்டானது. இதையடுத்து அவர் கொரோனா டெஸ்ட் செய்துகொண்டார். தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தபோது அவருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதா பா.ஜ ஆதரவுடன் எம்பி ஆக வெற்றி பெற்றார். இவர் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சுமலதா கணவர் அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். முன்னாள் மத்திய மந்திரியாகவும் இருந்திருக்கிறார். கடந்த 2018 ம் ஆண்டு பெங்களூருவில் அவர் காலமானார்.