மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவரைச் சந்திக்க முடியாமல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.கொரோனோ தொற்றின் அறிகுறிகள் இருக்கும் பலர், மருத்துவரைப் பார்க்க முடியாமல், தங்களுக்குத் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள முடியாமல், பதட்டத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதையும் அரசு கவனிக்க வேண்டும்.
“பரவலான பரிசோதனை” என்பதைத் தொடக்கத்தில் இருந்தே மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறது. அதைச் செய்யாததால் தான் சென்னையில் மட்டுமே கொரோனா இருப்பது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு, அதிலிருந்து தப்பிவிடும் நோக்கத்தில், மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்னையில் இருந்து வெளியேறியது ஜூன் மாதம் முழுவதும் நடந்தது.தற்போது பிற மாவட்டங்களில் பெருகும் தொற்று மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவை அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டிருக்கும் நிலையைக் காண்பிக்கிறது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 95 ஆய்வகங்களில் சராசரியாக ஒருநாளைக்கு 35,000 நபர்களுக்குப்பரிசோதனை செய்யப்படுகிறது என்று அரசின் அறிக்கை தெரிவித்தாலும், மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் நோய்க்கிருமியின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காத்திட அரசு இன்னும்முனைப்புடன் செயல்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும். அதன் முதற்கட்டமாக கொரோனா நோயின் அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரின் அனுமதிச் சீட்டுக்காகக் காத்திருக்காமல் நேரடியாக ஆய்வகங்களைப் பரிசோதனைக்காக அணுகலாம் என அறிவிக்க வேண்டும்.
இது மக்கள் மருத்துவரைச் சந்திக்க மருத்துவமனைகளில் கூட்டம் கூட்டமாகக் காத்திருப்பதைத் தவிர்ப்பதுடன், அதில் ஆகும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம்.அதே வேளையில் அனைத்து ஆய்வகங்களில் பரிசோதனை உபகரணங்கள் போதுமான கையிருப்பு இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.நோய்த்தொற்றின் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இது போன்ற ஒரு முன்னெடுப்பு நேற்றில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இரண்டாம் கட்டமாக ஆய்வகங்களிலோ, மருத்துவமனைகளிலோ மக்கள் கூடுவதைத் தவிர்க்க கொரோனா பரிசோதனைகளை ஆய்வக ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வீட்டில் சென்று ஆய்வுகள் மேற்கொள்வதையும் தொடங்க வேண்டும். இதனால் தொற்றில்லாமல் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு, ஆய்வகங்களில் காத்திருக்கும் போது தொற்று பரவும் அபாயம் தவிர்க்கப்படும்.
இந்த வசதிகளை அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்திடும் வகையில், இந்த பரிசோதனைகளின் விலையை இன்னும் குறைத்திட வேண்டும். டில்லியில் இப்பரிசோதனையின் விலையைக் குறைத்துக் கடந்த மாதமே அம்மாநில அரசு உத்தரவிட்டது.அதே போன்றோ அல்லது அதை விட விலை குறைப்பினை இங்குச் செய்தால், மக்கள் உயிர் காப்பதற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இல்லாமல் செய்திட முடியும். தன்னால் இயன்றவரை அரசு சிறப்பாகச் செயல்படும் என்று அரசு சொன்னாலும், மக்களின் உயிர் காக்கப்பட வேண்டிய இந்நேரத்தில் அனைத்து வகைகளிலும் முனைப்புடன் அரசு செயல்படும் என்ற உறுதியினை அரசு மக்களுக்குத் தந்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பணியாற்றிட வேண்டும். அவ்வாறு அரசுப் பணிபுரிந்திட வேண்டுமாயின், வருமுன் காத்திடல் வேண்டும். வந்த பின்பு சரி செய்தல் முறையல்ல. அரசின் கால தாமதத்தால் பாதிக்கப்படப்போவது, மக்களின் உயிர் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.