கொரோனா வைரஸ் தாக்கம் ஒட்டு மொத்தமாக மக்களைச் சுருட்டிப் போட்டிருக்கிறது. ஊரடங்கு தளர்வு என்ற பெயரில் ஓரளவுக்கு மக்கள் நடமாட்டம் சகஜ நிலைக்கு மாறி வருகிறது. ஆனால் சினிமா படப்பிடிப்பு பணிகள் தொடங்குவது என்பது மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக எப்போது வேலைகள் தொடங்கும் என்ற சலனமே இல்லாமல் இருக்கிறது.கொரோனா ஊரடங்கிற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு புனே மற்றும் ஐதராபாத்தில் நடந்தது.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தபோது ஊரடங்கு தடையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த 30 நாளில் எல்லாம் முடிந்துவிடும் படப்பிடிப்பு தொடங்கிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இன்றைக்கு 100 நாள் கடந்துவிட்டது. கேமரா தூசு படிந்து மூலையில் கிடக்கிறது.வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்க அனுமதி கிடைக்கும் என்ற எண்ணத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது படக் குழு.பொன்னியின் செல்வன் படத்தின் பிரதான காட்சிகளை புனே மற்றும் ஐதராபாத்தில் ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்க மணிரத்னம் மெகா திட்டங்கள் செய்து வருகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட யூனிட்கள் பிரிந்து காட்சிகளைப் படமாக்குவது பற்றி காட்சி பிரிக்கும் வேலைகள் நடக்கிறது.
ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடிக்கும் காட்சிகளை வரும் செப்டம்பரில் முடிக்க எண்ணி உள்ளதுடன் அத்துடன் சேர்த்து நந்தினி என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராய் காட்சிகளும் இணைத்து படமாக உள்ளது. படப் பிடிப்புக்கான பணிகள் ஒருபக்கம் திட்ட மிடப்பட படப்பிடிப்பில் பங்கேற்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான முகக்கவசம். கையுறை, சேனிடைசர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசனை நடக்கிறது.