கொரொனா தொற்று பரிசோதனை செய்து கொண்ட அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதியானது, இதையடுத்து அமிதாப், அபிஷேக் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். அங்கிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூச்சு விடச் சிரமப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து உடனடியாக அவரும் அவரது மகள் ஆராத்யாவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
46 வயதான ஐஸ்வர்யாராய் மற்றும் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் தங்கியிருந்த வீடு சீல் வைக்கப்பட்டது. பச்சன் குடும்பத்திற்குச் சொந்தமாக மேலும் மூன்று பங்களாக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமிதாப், அபிசேக் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்குத் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் நடிகை ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவருக்குமான வைரஸ் தொற்று வெளியில் தெரிய வந்தது. அதை பின்னர் அபிசேக் பச்சனும் உறுதி செய்தார்.
அமிதாப் குடும்பத்தினர் தவிரப் பாலிவுட்டில் பல நடிகர், தயாரிப்பாளர்கள் அமீர்கான், கரண் ஜோஹர், போனி கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர், அனுபம் கெர் போன்றவர்களின் குடும்பத்தில் ஊழியர்களுக்கு, குடும்பத்தார் சிலருக்கும் தொற்று அறிகுறி இருப்பது பற்றித் தெரிய வந்தது இந்தி நடிகை ரேகாவின் பங்களா பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து பங்களாவுக்குச் சீல் வைக்கப்பட்டது.