பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று பலரும் தெரிவித்தனர். பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் தங்களின் வாரிசுகள் நடிகர் நடிகைகளாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக வெளியிலிருந்து அல்லது வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களை அவமானப்படுத்தியும் அவர்களது பட வாய்ப்புகளைப் பறித்தும் அவமதிக்கிறார்கள். இதனால் அந்த நடிகர்கள் மன அழுத்துக்குள்ளாகின்றனர். அதுபோல் தான் சுஷாந்தும் அவமானப்படுத்தப்பட்டார் , அவரது பட வாய்ப்புகள் பறிக்கப்பட்டன என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். மேலும் ஊடகங்களும் அந்த சுஷாந்த்துக்கு எதிரான விமர்சனம் வெளியிடுகின்றன எனவும் புகார் கூறினார். இது பரபரப்பானது.
சுஷாந்த் வழக்கை மும்பை பாந்த்ரா போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இதுவரை 30 பேர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். நடிகை கங்கனா தெரிவித்திருந்த கருத்து பற்றியும் விசாரிக்க முடிவு செய்தனர். கங்கனா தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தார். தற்போது ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். கங்கனாவை சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் அவர் அளித்த பேட்டி தொடர்பாக விசாரிக்க போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் தரக் கேட்டனர். அதை கங்கனா ஏற்க மறுத்திருக்கிறார்.
இதுபற்றி கங்கனா கூறியதாவது: என்னை வாக்குமுலம் தர போலீஸார் அழைத்தனர், நான் மணாலியில் இருப்பதால் அங்கு வர முடியாது. நீங்கள் யாரையாவது நேரில் அனுப்புங்கள் அவர்களிடம் சொல்கிறேன் என்றேன். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து பதில் இல்லை. நான் என்ன பேசினேன் என்பதெல்லாம் பொது வெளியில் இருக்கிறது. அதையெல்லாம் நிரூபிக்க வேண்டுமென்றால் அதற்கு நான் ஆள் இல்லை. எனக்குத் தரப்பட்ட பத்மஸ்ரீ விருதை கூட நான் அரசிடம் திருப்பி தரத் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு கங்கனா ரனாவத் கோபமாகத் தெரிவித்தார்.