நடிகர்கள் விமல், காமெடி நடிகர் சூரி இருவரும் கொரோனா ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்துடன் பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில் விமல். சூரி சில நண்பர்களுடன் கொடைக்கானல் வனப்பகுதி சென்றனர். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் அவர்கள் மீன் பிடித்தனர். இந்த படங்கள் நெட்டில் வெளியானது. அதுவே அவர்களுக்கு வினையாகிவிட்டது.
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் விமல், சூரி சென்றது எப்படி. ஊரடங்கு நேரத்தில் இ பாஸ் இல்லாமல் அவர்கள் கொடைக்கானல் பகுதிக்கு வந்தது எப்படி, பொது இடைவெளி கடைப்பிடிக்காமல் ஒன்றாகப் புகைப்படம் எடுத்தது எப்படி? எனப் பல கேள்விகளை நெட்டிஸன்கள் எழுப்பினர். இது பெரிய சர்ச்சையாக உருவாகி இருக்கிறது. பேரிஜம் பகுதியில் உள்ள ஏரியில் அவர்கள் மீன் பிடித்தது எப்படி என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வன காவலர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானல் போலீஸ் டெபுடி கமிஷனர் இந்த சம்பவம் குறித்துக் கூறும்போது, கொடைக்கானல் மலைப் பகுதிக்கு நடிகர்கள் எப்படி வந்தனர், அதுவும் தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக வந்து பேரிஜம் ஏரியில் மீன் பிடித்தது எப்படி என்று விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.முன்னதாக விமலும் சூரியும் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வீடியோ வெளியிட்டும் கிராமப் பகுதிகளில் மருந்து தெளித்தும் அவர்கள் வைரஸ் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.