சினிமாவில் கருத்துச் சொன்னால் போதாது. அதைச் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் நடைமுறையில் செய்து காட்டுபவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். வில்லன் நடிகர் என்றாலே அவர்கள் மீது எப்போதும் ஒரு கோபம் மக்கள் மத்தியிலிருக்கும். அது நம்பியார் காலத்தோடு போய் விட்டது என்பது போல் இப்போதுள்ள வில்லன் நடிகர்களின் சமூக அக்கறை அதிகரித்து அது அவர்களை மக்கள் மனதில் ஹீரோவாக்கி நிறுத்தி இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தை ஹீரோக்கள் எந்தளவுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை விட வில்லன் நடிகர்கள் பயன்படுத்திக்கொண்ட செயல்முறைகள் அவர்களைப் பாராட்டு மழையில் நனைய வைத்திருக்கிறது.
நடிகர் பிரகாஷ்ராஜ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பவும் வீடற்று போக்கிடம் இல்லாதவர்களைத் தனது பண்ணை வீட்டில் தங்க வைத்தும் கிராமப் புறங்களில் குழந்தைகள் படிப்பதற்காக ஆங்காங்கே பாட சாலைகள் ஏற்படுத்தி ஆசிரியர்கள் நியமித்து பாடம் சொல்லிக்கொடுத்தும் உதவிகள் புரிந்து வருகிறார். அவரை போலவே வடக்கில் ஒரு வில்லன் நடிகர். இவர் அருந்ததி, தேவி போன்ற தமிழ்ப் படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். அவர் செய்து வரும் உதவிகள் அரசாங்க அமைப்புகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. எங்கள் கட்சிக்காரர் என்று பெரிய தேசிய கட்சிகள் அவரை உரிமை கொண்டாடுகின்றன.ஊரடங்கில் ஊர் திரும்பமுடியாமல் மும்பையில் தவித்த பல்லாயிரக் கணக்கானவர்களை பஸ்ஸிலும் விமானத்திலும் அனுப்பி ஊர் திரும்ப வழி செய்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உணவு குடிநீர் போன்றவற்றை ஏற்படுத்தித் தந்தார்.
மாடுகள் வாங்கி ஏர் உழ வசதி இல்லாமல் தனது மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் ஏர் உழுத ஏழை விவசாயி ஒருவரின் கஷ்டத்தை கண்டு அன்று மாலையே அவரது வீட்டிற்கு டிராக்டர் வாங்கி அனுப்பினார் சோனு சூட். வெளிநாட்டிலிருந்து இந்திய திரும்ப முடியாமல் தவித்த மாணவர்களை விமானத்தில் மீட்டு அழைத்து வந்தார். சோனு சூட்டுக்கு மக்கள் மத்தியிலிருந்து மட்டுமல்லாமல் நடிகை காஜல் அகர்வால் முதல் பல்வேறு ஹீரோக்கள் மற்றும் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இன்று சோனு சூட் பிறந்த நாள். அவர் புலம் பெயர்ந்தவர்கள் 3 லலட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி அளித்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
அவர் இது குறித்து சோனு சூட் கூறும் பொழுது, "எனது பிறந்தநாளை முன்னிட்டு எனது வெளிநாட்டு சகோதரர்கள் புலப்பெயர்ந்தவர்களுக்கு பிரவாசி ரோஜ்கர்.காம். உடன் 3 லட்சம் வேலைகளுக்கான எனது ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் நல்ல சம்பளம், பிஎஃப், இஎஸ்ஐ மற்றும் பிற சலுகைகளை வழங்குகின்றன. நன்றி ஏஇபிசி, சிஐடிஐ, ட்ரைடென்ட், க்வெஸ் கார்ப், அமேசான், சோடெக்ஸோ, அர்பன் கோ, போர்டியா மற்றும் பிறர்" என குறிப்பிட்டிருக்கிறார்.
சோனு சூட் குறிப்பிட்டுள்ள பெரிய நிறுவனங்களில் இந்த வேலைகளை அளிக்கும் என்று தெரிகிறது.