கொரோனா தொற்றுக்குப் பிரபலங்களும் தப்பவில்லை. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முதல் நம்ம ஊர் நடிகர் கருணாஸ் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் இது வதந்தி என்று கூறப்பட்ட நிலையில், ``எனக்குச் சளி, இருமல், லேசான காய்ச்சல் இருந்தது. அதை எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பாததால் மருத்துவமனை வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் லேசான கொரோனா தொற்று தென்பட்டது. நீங்கள் வீடு சென்று ஓய்வெடுக்கலாம் என்றனர்.
ஆனால் அதை விரும்பாமல் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன். எனக்கு காய்ச்சல் குறைந்திருக்கிறது. மற்றபடி நான் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறேன்.ஓய்வுக்காகத்தான் மருத்துவமனை வந்திருக்கிறேன்" என்று வீடியோ வெளியிட்டார்.தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி, அவர் ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்து வருவதால், உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையைக் கண்காணிக்கச் சிறப்பு மருத்துவக்குழு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.