கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தவகையில் விமான விபத்தின் மீட்புப் பணிகளை முன்னின்று நடத்திய மலப்புரம் கலெக்டர் கோபால கிருஷ்ணன், போலீஸ் எஸ்.பி எனப் பலர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் மலப்புரம் கலெக்டர் கோபால கிருஷ்ணன், போலீஸ் எஸ்.பி உட்பட விமான விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 21 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 21 பேருமே அரசு அதிகாரிகள் ஆவர். ``நேற்றிலிருந்தே எனக்கு கொரோனா அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. இன்று தொற்று உறுதியாகியுள்ளது" என மலப்புரம் கலெக்டர் கூறியிருக்கிறார்.இதற்கிடையே, மலப்புரம் கலெக்டருடன் தொடர்பில் இருந்ததன் காரணமாக தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். விமான விபத்து நடந்த மறுநாளே கோழிக்கோடு வந்து பார்வையிட்டார் முதல்வர் பினராயி.
அப்போது மலப்புரம் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தான் அவரை வழி நடத்தினர். இதனால் தான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பினராயி பங்கேற்கமாட்டார் என்றும், அதற்குப் பதிலாக அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கொடி ஏற்றுவார் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது .இதேபோல் முதல்வருடன் அன்றைக்கு கோழிக்கோடு சென்ற அமைச்சர்கள் இ. சந்திரசேகரன், கே. சைலஜா, ஏ. சி. மொய்தீன், கேரள டிஜிபி உள்ளிட்டோரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் எனத் தெரிகிறது.