பாலு, சீக்கிரம் வா.. : இளையராஜா இதயம் கசிந்து உருக்கம்..

by Chandru, Aug 15, 2020, 14:37 PM IST

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம் கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் முதல்நாள் சிகிச்சைக்காகச் சேர்ந்த போது சிகிச்சைக்குப் பின் குணமாகி சீக்கிரம் திரும்பி வருவேன். யாரும் போன் செய்து தொந்தரவு செய்யாதீர்கள் என்றார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.

இதையடுத்து பாரதிராஜா, ராதிகா, ஏஆர் ரஹ்மான். அனிருத் உள்ளிட்ட பலர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணம் அடைய வேண்டிப் பிரார்த்திப்பதாக மெசேஜ் பகிர்ந்தனர். இந்நிலையில் எஸ்.பி.பி மகன் சரண் அளித்த பேட்டியில் என் தந்தைக்கு அச்சப்படும் அளவுக்கு உடல்நிலை மோசமில்லை என்றார். அதன் பிறகே ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.முன்னதாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் அவரது ஆருயிர் நண்பர் இளையராஜா இதயம் கசிந்து உருக்கமான ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், பாலு, நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய், பாலு சீக்கிரம் வா என்று தெரிவித்திருக்கிறார்.

இளையராஜா கூறியதாவது:பாலு, சீக்கிரமாக எழுந்து வா உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்றுசேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது. அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி ஸ்வரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அது போன்றது உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை.

நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போது அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன். அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை