கொரோனா தொற்றில் உதவி செய்து எந்தெந்த நடிகர்கள் பேர் வாங்கினார்களோ, இல்லையோ வில்லன் நடிகர் சோனு சூட் கணக்கிலடங்காத உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவாகி விட்டார். இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் வேலை பார்த்தவர்கள் கொரோனா ஊரடங்கால் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாதபடி தவித்த பல்லாயிரக்கணக்கான பேரை தனி பஸ். ரயில் ஏற்பாடு செய்து ஊர்களுக்குத் திருப்பி அனுப்பினார். வெளிநாட்டில் தவித்த டாக்டர் மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார். மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கித் தந்தார். அவசியத் தேவைகளை உடனே நிறைவேற்றிக் கொடுத்த சோனுசூட் பிரபலங்களின் பாராட்டையும் பெற்றார்.
இந்நிலையில் இரண்டு பேர் அவரிடம் குறும்புத்தனமாக உதவி கேட்டனர். மஞ்சு வர்மா என்ற ஒரு பெண், எனது செல்போனில் நெட் வேகமாக இல்லை அதைச் சீர்செய்து தர முடியுமா என்று நக்கலாக கேட்டார். அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அவருக்கு ஜாலியான பதில் அளித்தார் சோனு. ஒரு பெண்ணின் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்வது, ஒரு பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது மற்றும் ஒரு வீட்டுக் குழாயில் நீர் வரவைப்பது போன்ற பிரச்சனையில் தீவிரமாக இருக்கிறேன் நாளை காலை வரை பொறுங்கள் பார்க்கலாம் எனத் தமாஷாகப் பதில் அளித் தார். அதேபோல் ஒரு மாணவர், தனக்கு சக மாணவர்களுடன் விளையாட பிளே ஸ்டேஷன் வேண்டும் வாங்கி தருவீர்களா என்றார். அந்த சிறுவனுக்கு,அது உங்களிடம் இல்லாதது கடவுள் கொடுத்த வரம். உங்களுக்குப் புத்தகங்கள் வாங்கி தருகிறேன் படியுங்கள் என்று அட்வைஸ் செய்தார் சோனு சூட்.