மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். கடைசியாக களவாணி 2 படத்தில் விமலின் அம்மாவாக நடித்தார். அடுத்து, கள்ள பார்ட், எம்ஜிஆர் நகர், பூமி, அருவா சண்டை ஆகிய படங்களில் நடிக்கிறார்.
சரண்யா தந்தை ஏ.பி.ராஜ். இவர் மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆவார். கலியல்ல கல்யாணம், கண்ணூர் டீலக்ஸ், டேஞ்சர் பிஸ்கட், லாட்டரி டிக்கெட் உள்ளிட்ட 65 மலையாளப் படங்களை இயக்கியுள்ளதுடன் தமிழில் துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு படங்களை இயக்கி உள்ளார். ஏ.பி.ராஜூக்கு 91 வயது. வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏ.பி. ராஜ் முழு பெயர் ஆண்டனி பாஸ்கர் ராஜ். 1929ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். 1947ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்தார். 1951 முதல் 1986 வரை சினிமா துறையில் இருந்த இவர் பல வெற்றிப் படங்களை இயக்கி அளித்தார். இவர் இயக்கிய படம் தேசிய விருதும் பெற்றிருக்கிறது. சுமார் 11 ஆண்டுகள் இலங்கையில் வசித்தவர் 6 சிங்கள படங்களையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சரண்யா இயக்குனர் பொன்வண்ணனை மணந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.