மலையாள சினிமாவில் பொதுவாக நடிகர்கள் யாரும் அதிகமாக ஈகோ பார்ப்பதில்லை. நல்ல கேரக்டர் கிடைத்தால் யார், யாருடன் வேண்டுமானாலும் நடிப்பார்கள். மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர்களான மோகன்லாலும் மம்மூட்டியும் சேர்ந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? 1990ல் இருவரும் சேர்ந்து நடித்த 'நம்பர் 20 மெட்ராஸ் மெயில்' என்ற படத்தில் மம்மூட்டி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகராகவே வருவார்.
இதேபோல கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக 'ட்வென்டி ட்வென்டி' என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. இந்த படத்தில் மலையாள சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் சேர்ந்து எந்த ஈகோவும் பார்க்காமல் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல மம்மூட்டியின் மகனும், இளம் நடிகருமான துல்கர் சல்மான், தான் மோகன்லாலின் தீவிர ரசிகர் என்று வெளிப்படையாகவே பலமுறை கூறியுள்ளார். மேலும் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பிருத்விவிராஜும், தான் மோகன்லாலின் ரசிகர் என்று கூறியுள்ளார்.
இதனால்தான் மோகன்லாலை வைத்து சமீபத்தில் அவர் லூசிஃபர் என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் பிருத்திவிராஜின் மனைவி சுப்ரியா மேனன் தனது பேஸ்புக்கில் இன்று ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அது மோகன்லாலுடன் துல்கர் சல்மானும், பிருத்விராஜும் சேர்ந்து எடுத்த ஒரு போட்டோ ஆகும். ஒரு டிவி நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்ட போது 3 பேரும் சேர்ந்து எடுத்த இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.