தமிழ் திரையுலகைப் புரட்டிப் போட்ட இரண்டு சூப்பர் ஸ்டார்கள் அமைத்துத் தந்த பாதையில் தான் இன்றைக்கும் தமிழ சினிமா வீரநடை போட்டுக்கொண்டிருக்கிறது என்று அழுத்தமாகவே கூறலாம். அந்த இரண்டு ஜாம்வான்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் இவர்களுக்குள் போட்டி இருந்தபோதும் அது ஒருநாளும் அவர்களுக்குள் இருந்த அன்பையும் நட்பையும் முறித்ததில்லை. நாடாண்ட எம்ஜிஆர் , சினிமவை ஆண்ட சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. 1954ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வெளியானது. அந்த நாள் இன்று (28 ஆகஸ்ட் 2020) பிரபல எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான விந்தனின் கதை, திரைக்கதை, வசனத்தில் பிரபல பழம்பெரும் திரைப் பட இயக்குனர் டி ஆர். ராமண்ணா இயக்கினார். இயக்குனர் T.R.டி.ஆர். ராமண்ணாவும் அவரது சகோதரியும் பிரபல பழம்பெரும் திரைப்பட நடிகையுமான டி ஆர். ராஜகுமாரியும் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பி.எஸ்.சரோஜா (டி.ஆர். ராமண்ணாவின் மனைவி), டி.டி.குசல குமாரி (டி.ஆர்.ராஜகுமாரியின் சிறிய தாயார் மகள்) நடிக்க, தஞ்சை ராமையா தாஸ், கவிஞர் கா.மு.ஷெரீப் மற்றும் மருத காசி பாடல்கள் எழுதினர். கே.வி. மகாதேவன் இசை அமைத்தார், எம் ஏ. ரஹ்மான் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. பின்னர் இந்த இரண்டு பறவைகள் கூண்டை திறந்துகொண்டு திரை வானில் வேறு வேறு பாதையை தங்களது பணியாக்கிக் கொண்டு பறக்கத் தொடங்கின. கொள்கை ரீதியான பாதையை எம்ஜிஆர் தேர்வு செய்ய குடும்ப ரீதியான பாதையைச் சிவாஜி தேர்வு செய்தார். சிவாஜி நடித்த பாசமலர், திரிசூலம், தங்கப்பதக்கம் போன்ற பல படங்கள் குடும்ப ரீதியான படங்களாக வெள்ளிவிழாக்களைக் கொண்டாடின. நாடோடி மன்னன், மந்திரிகுமாரி, அரசகட்டளை, ஆயிரத்தில் ஒருவன், நம்நாடு, அடிமைப்பெண் என எம்ஜிஆர் நடித்த படங்களை அரசு ஆட்சி, மக்கள் ஆட்சி என்ற தத்துவத்துடன் கூடிய படங்களாக வெளிவந்து மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் வெள்ளிவிழா படங்களாக அமைந்தன.
எம்ஜிஆர், சிவாஜி என்ற இருவர் போட்டுத்தந்த பாதையில் தான் இன்றைக்கும் உள்ள நட்சத்திரங்கள் தங்களை வகைப்படுத்திக் கொண்டு பயணிக்கின்றனர். எத்தனை டிஜிட்டல் மாற்றங்கள், ஒடிடி தளங்கள் வந்தாலும் நல்ல படங்களாக, மக்களுக்குப் பயனுள்ள படங்களாகத் தர வேண்டுமென்றால் அதற்கெல்லாம் முன்னோடிகள் இந்த இருவரும் தந்த படங்கள் தான். இந்த பாணி படங்கள்தான் வாழ்க்கை முறையையும் அரசியல் கட்டமைப்பையும் சிறப்பாக்க முடியும்.எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகி நாடு ஆண்டார், சிவாஜி நடிகர் திலகத்திலிருந்து நடிப்பு சக்ரவர்த்தி ஆக உயர்ந்து சினிமாவை ஆண்டார். இருவரும் என்றைக்கும் மக்கள் மனங்களை ஆண்டுகொண்டிருப்பார்கள். அந்த முன்னோடிகளுக்கு தி சப் எடிட்டர் டாட் காம் சார்பில் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.