கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம். சினிமா ஷூட்டிங் தொடங்கலாம். மால்கள் திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் சினிமா தியேட்டர்கள் மட்டும் திறக்க அனுமதி இல்லை. இது தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தியேட்டர் திறப்பை எதிர்பார்த்து விஜய் நடித்துள்ள மாஸ்டர், தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் போன்ற சில பெரிய மற்றும் மீடியம், சிறுபட்ஜெட் என சுமார் 50 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்களுக்காவது ஒடிடி தளங்களில் விற்க, வெளியிட வாய்ப்பிருக்கிறது. மற்ற படங்களை ஒடிடி தளங்கள் வாங்க மறுக்கின்றன. அந்த தளங்களுக்கு யார் கட்டுப்பாடு விதிப்பது? தியேட்டரை திறப்பது மூடுவது எல்லாம் அரசாங்கம் கையில் அதிகாரம் உள்ளது தியேட்டரிலிருந்து வரி வருவாயும் அரசுக்குக் கிடைக்கிறது ஆனால் ஒடிடி தளங்கள் மூலம் அரசுக்கு என்ன வரி அல்லது வருமானம் கிடைக்கிறது என்று தெரியவில்லை.
பாரதிராஜா தலைமையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கம் தியேட்டர்களில் பாப்கார்ன் விலை முதல் பார்க்கிங் கட்டணம் வரை அடிக்கும் கொள்ளை லாபம் பற்றிப் பேசியிருக்கிறது. மால்கள், தியேட்டர்களின் இந்த போக்கால் தான் ரசிகர்கள் ஒடிடி தளத்தை நாட ஆரம்பித்திருக்கிறார்கள். டிக்கெட் விலை குறைக்காமல், பார்க்கிங் கட்டணம் குறைக்காமல் தியேட்டரில் படங்கள் ஓடுவதென்பதெல்லாம் சாத்தியமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம். இரண்டரை மணி நேரப் படத்துக்கு 2 மணி நேரத்துக்கு மட்டுமே 50 ரூபாய் பார்க்கிங் கட்டணம் நிர்ணயித்துவிட்டு படம் முடிந்து வரும்போது பார்க்கிங் கட்டணம் 2 மணி நேரம் முடிந்துவிட்டது என்று சொல்லி மற்றொரு கூடுதல் கட்டணம் வசூலிப்பது என்ற நிலை தொடர்ந்தால் தியேட்டர்கள் திறப்பு என்பது வீணாகிவிடும். ஒரு நபர் தியேட்டருக்கு வந்தால் குறைந்த பட்சம் 500 முதல் 1000 வரை செவழிக்க வேண்டி உள்ளது.
ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரவேண்டுமென்றால் அந்த மாத சம்பளத்தையே செலவழித்தாக வேண்டிய சூழல். இதற்கெல்லாம் இந்த காலகட்டத்திலேயே தியேட்டர்காரர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும், மக்களை தியேட்டர்களுக்கு ஈர்க்க முயல வேண்டும் என்று திரையுலகில் குரல்கள் ஒலிக்கின்றன. இந்த தகவல்களை சமீபத்தில் பாரதிராஜா, சூர்யாவின் சூரரைப்போற்று படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளார்.
ரஜினி நடித்த பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், இது திரையரங்குகளை திறப்பதற்கான நேரம். பல மக்களின் வாழ்வாதாரம் இதில் உள்ளது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட் செய்துள்ளார். அதேபோல் பாப்கார்ன் விலை உள்ளிட்ட தியேட்டர்களில் உள்ள மற்ற பிரச்சனையும் பேசி தீர்க்க வேண்டிய நேரம் என்பது உண்மைதான் எனக் கோலிவுட்டில் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். பூனைக்கு மணி கட்ட வேண்டியது அவசியம் தான் ஆனால் அதைக் கட்டுவது யார் என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.