வீட்டுக்குள் வந்த பாம்பை பயப்படாமல் பிடித்த நடிகை.. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த நாய்..

by Chandru, Sep 4, 2020, 10:41 AM IST

ஊமை விழிகள், தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அருண் பாண்டியன். தற்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து ஹெலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தனது கிராமத்து வீட்டில் தங்கி இருக்கிறார். பல நடிகைகள் வயல் பக்கம் சென்றிருக்க மாட்டார்கள் ஆனால் கீர்த்தி பாண்டியனுக்கு வயலில் இறங்கி நாற்று நடவும் உழவு பணி செய்யவும் தெரியும். டிராக்டரில் நிலத்தை உழுது வயலில் நாற்று நட்ட புகைப்படங்களைத் தனது வலைத் தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி வீட்டு சுற்றுச்சுவர் வளாகத்தின் ஓரத்தில் தண்ணீர் குழாய்க்கு அருகில் நின்றபடி வீட்டு நாய் குறைத்துக் கொண்டிருந்தது. இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தது, நீண்டநேரம் நாய் குறைத்தபடி இருந்ததைப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அருகில் சென்று பார்த்த போது அங்கு ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.
பாம்பைப் பார்த்ததும் வீட்டிலிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களைக்கண்டு பயந்த நாயும் விலகி ஓடியது. அதைப் பார்த்த கீர்த்தி, என்ன விஷயம் என்று கேட்டபடி அங்கு வந்து பார்த்தார்.

பாம்பைக் கண்டு பயப்படாமல் ஒரு பக்கெட்டை எடுத்துவரச் சொன்னார். பிறகு ஒரு குச்சியை எடுத்து லாவகமாகப் பாம்பைத் தூக்கி பக்கெட்டுக்குள் போட்டார். பிறகு அதே குச்சியால் பக்கெட்டை தூக்கிக் கொண்டு சென்று வீட்டுக்கு வெளியில் புதர் பகுதியில் விட்டார். இதையெல்லாம் தூர நின்று நாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கீர்த்தியின் தைரியத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பாராட்டினர். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


More Cinema News