இந்தி தெரியாததால் வெற்றி மாறனை அவமானப்படுத்திய டெல்லி அதிகாரி.. வைரலாகும் பரபரப்பு தகவல்..

by Chandru, Sep 4, 2020, 18:31 PM IST

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை அசுரன் போன்ற அழுத்தமான படங்களை இயக்கியதுடன் தேசிய விருது வென்றவர் வெற்றிமாறன். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெல்லி விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்றதால் தனக்கு நடந்த கொடுமையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.சக கலைஞர்களுடன் வெளிநாட்டில் நடந்த கலை விழாவில் பங்கேற்கச் சென்ற வெற்றி மாறன் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அங்கிருந்த அதிகாரி வெற்றிமாறனிடம் எதையோ கேட்க அதற்கு வெற்றிமாறன் ஆங்கிலத்தில் பதில் சொன்னார்.

அதைக்கேட்டு அந்த அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. நீங்கெல்லாம் இப்படித்தான். தமிழர்களும், காஷ்மீர் மக்களும் தான் இந்த தேசத்தைப் பிரிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள். இந்தியாவின் தாய் மொழி இந்தி தெரியாமலிருக்கிறீர்களே என்று கேட்டிருக்கிறார். அதற்கு வெற்றி மாறன், என் தாய் பேசும் மொழி தமிழ். தமிழ் தான் என் தாய் மொழி என்று கூற அதைக் கேட்டு மேலும் கோபம் அடைந்த அதிகாரி வெற்றிமாறனை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டார்.

வெற்றி மாறன் உடன் வந்த ஜீவி பிரகாஷ் போன்றவர்கள் அந்த அதிகாரியிடம் எடுத்துச்சொல்லியும் கேட்கவில்லை. சுமார் 45 நிமிடம் வெற்றிமாறனை நிற்க வைத்தார். பின்னர் அங்கு வந்த வேறு அதிகாரி வெற்றி மாறனை அனுப்பி வைத்தார்.
வெற்றி மாறனுக்கு இன்று பிறந்தநாள் அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நேரத்தில் அவருக்கு இப்படியொரு அவமானம் ஏற்பட்டதை அறிந்து அந்த அதிகாரிக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


More Cinema News

அதிகம் படித்தவை