நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். அந்த நடிகை பற்றிய சுவாரஸ்மான விவரம் இதோ..டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் என ஒரு சில தெலுங்கு படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தன்னா தனது நடிப்பின் மூலம் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்திருக்கிறார். டியர் காம்ரேட் படம் தமிழிலும் வெளியானதால் தமிழிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.
தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு முன் ராஷ்மிகா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானார். அதில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியுடன் காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார் ராஷ்மிகா. அதன்பிறகு தெலுங்கு படங்களில் நடிக்க வந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி தற்போது இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்ததால் இருவருக்கும் காதல் என்று கிசு கிசு கிளம்பியது. அதை ராஷ்மிகா மறுத்துவிட்டார்.தெலுங்கில் ராஷ்மிகா நடித்த யஜமனா, கீதா கோவிந்தம், அன்புள்ள தோழர் மற்றும் சமீபத்தில் வெளியான சரிலேரு நீகேவாரு என எல்லாப் படங்களும் வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். வெவ்வேறு நடிகர்களுடன் நடித்தாலும் ராஷ்மிகா பற்றி காதல் கிசுகிசு தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. தனது ரிலேஷன்ஷிப் குறித்து அவர் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பின்னர் தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து ராஷ்மிகா தனது சமூக வலைத் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எனக்குத் தெரிந்த அனைவருடனும் இணைத்து என்னை எழுதிவிட்டார்கள். ஆனால் நான் சிங்கிள் (ஒற்றை). இதைத் தான் நான் விரும்புகிறேன். தனிமையில் இருப்பவர்களுக்கு அதன் அருமை பற்றியும் அதன் இனிமை பற்றியும் நன்கு தெரியும். உங்கள் காதலனுக்காக உங்கள் அந்தஸ்தை சிங்கிளாக வைத்திருப்பது உயர்ந்ததாக இருக்கும்.
இவ்வாறு ராஷ்மிகா கூறி உள்ளார். விரைவில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் மூலம் ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகவிருக்கிறார்.