பெரும்பாலான நடிகைகளுக்கு அரசியல் ஆசை வந்தது போல் நடிகை கங்கனாக்கும் அரசியல் ஆசை வந்து விட்டது என்றே தோன்றுகிறது அதுவும் ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்கும் நிலையில் அந்த ஆசை அவருக்கு அதிகமாகவே இருக்கிறது. தனது அரசியல் ஆசையை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக பாஜக ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு மும்பையில் அரசியல் நாடகம் அரங்கேற்றி வருகிறார். சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் வாரிசு நடிகர்களால் அவர் தற்கொலை செய்ததாக சர்ச்சையைக் கிளப்பியவர் அப்படியே பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரத்தைக் கோர்த்துவிட்டு மும்பையைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் என்று மகாராஷ்டிரா அரசையும் சீண்டினார். அது தீயாய் பற்றிக் கொண்டது.
கங்கனாவுக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனா, பதிலடி கொடுத்தது. மும்பை வந்தால் தேசத் துரோக வழக்கு தொடரப்படும் என்றளவுக்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். அதைச் சாக்காக வைத்து தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பேசியும், பாலிவுட் போதைப் பொருள் விவகாரத்தில் நான் ஆதாரம் தரத் தயாராக இருக்கிறேன் அதற்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டார். இதையடுத்து அவருக்கு மத்திய பாஜ அரசு ஒய் பிளஸ் கமாண்ட் டோ பாதுகாப்பு அளித்துள்ளது.
தற்போது கமாண்டோ படை பாதுகாப்பில் கங்கனா இருக்கிறார். இதுகுறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு மறைமுகமாக கங்கனா மீது ஒரு தாக்குதல் நடத்தி இருக்கிறார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் வரி கட்டுகிறேன் யாரோ எக்ஸ் அண்ட் ஒய்க் பாதுகாப்புக்காக.. எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை நக்மா கங்கனாவை போட்டுத் தாக்கி இருக்கிறார்.
அவர் டிவிட்டரில் கூறும்போது, மகாராஷ்டிர மாநிலம் , முக்கிய நகரமான மும்பை பெயரை நடிகை கங்கனா ரணாவத் கெடுத்துக்கொண்டிருக்கிறார். போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லி ஒட்டுமொத்த பாலிவுட்டுக்கும் அவப் பெயரைக் கொண்டு வருகிறார். முதலில் வாரிசு அரசியல் என்று ஆரம்பித் தார், பின் பாலிவுட்டுக்குள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவர்களுக்கு எதிரானவர்கள் என்று சொன்னார். இதன்பின் மும்பையைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றார்.
இதைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. தங்கள் கட்சிக்கு ஏற்றாற்போல பேசுவதால் கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பைக் கொடுத்துள்ளார்கள். ஆனால், கங்கனா மும்பைக்கு எதிராகப் பேசுகிறார். பாலிவுட்டில் நடித்து பத்ம விருது பெற்றவர். உலக அளவில் புகழ்பெற்ற மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்கிறார் போதை மருந்து பயன்படுத்துவதாக பொத்தாம் பொதுவாகப் பாலிவுட்டையும் உலக அளவில் இழிவுபடுத்துகிறார். அவர் சொல்வதற்கெல்லாம் ஆதாரம் தர வேண்டும் என்று கூறி இருந்தார்.