சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2 வருடத்துக்கு முன்பு அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்ததுடன் தனிக்கட்சி தொடங்கி 2021 ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். அதற்கேற்ப தனது மன்றங்களை ஒன்றிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்ததுடன் தலைமை முதல் தேர்தல் வார்டு நிர்வாகிகள் வரை நியமித்திருக்கிறார். ஆனாலும் கட்சி பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. வரும் நவம்பர் மாதம் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று நெட்டில் தகவல் பரவி வருகிறது/ ஆனால் ரஜினி தரப்பிலிருந்து இதுவரை இதுபற்றி பதில் எதுவும் வரவில்லை.
இதற்கிடையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் நவம்பரில் ரஜினி கட்சி தொடங்கி தமிழகத்தை ஆள்வார் என்ற ரேஞ்சிக்கு போஸ்டர்கள் அச்சடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சில இடங்களில் ரஜினி அரசியல் கட்சி பற்றிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இது குறித்து தலைமை மன்றத்துக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து ரஜினியின் உத்தரவின் பேரில் மன்றத்தினருக்குத் தலைமை நிர்வாகி சுதாகர்,தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம்; தன்னிச்சையாகச் செயல்பட வேண்டாம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர், மதுரை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் அறிவுறுத்தல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.