வலி புரிந்து தயாரிப்பாளர்களுடன் விநியோகஸ்தர்கள் துணை நிற்பது பலம்.. டி.ராஜேந்தர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத்தினருக்கு பாரதிராஜா பாராட்டு..

by Chandru, Sep 10, 2020, 18:46 PM IST

திரைப்பட தயாரிப்பாளர்கள் நடப்பு சங்கத் தலைவர் பாரதிராஜா 2 தினங்களுக்கு முன் தியேட்டர் அதிபர்களுக்கு சில கோரிக்கைகள் வைத்தார். ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க முடியாது, புதிய படங்களை திரையிடத் தராவிட்டால் தியேட்டர்களை கல்யாண மண்டபம் ஆக்குவோம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறினார். இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப் பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ளார்.

அதில் ,திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projector களை அமைத்துக் கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள் தான் செலுத்த வேண்டும். மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது என தியேட்டர் அதிபர்களுக்கு 4 கண்டிஷன்கள் விதிக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதி ராஜா இன்று விநியோகஸ்தர்களுக்கும் டி.ராஜேந்தருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் அதில் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சில முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்க திரையரங்க உரிமையாளர்களுக்குத் தீர்மானமாகச் சுட்டிக் காட்டிய விதிமுறைகளுக்கு உடனடியான பலமளித்த சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முக்கியமாக, டி ஆருக்கும், மன்னனுக்கும் நன்றிகள்.
தயாரிப்பாளர்களின் வலி புரிந்திருப்பதால் தான் டி ஆர் தன் சங்க நண்பர்களுடன் இணைந்து அற்புதமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வலி புரிந்து உடன் நிற்பதுதான் பலம். இன்றைய சினிமா நிலையைப் புரிந்து எங்களோடு பயணிக்க ஆதரவளித்த சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தீர்மானங்களுக்கும், தலைவர் டி. ஆருக்கும், செயலாளர் மன்னனுக்கும், மற்றும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும், அனைத்துத் தயாரிப்பாளர்கள் சார்பாகவும்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க நண்பர்கள் சினிமாவின் எதிர்காலம் கருத்தில் கொண்டு, ஒற்றுமையாக நின்று செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News