பிரபல நடிகர் இயக்கிய படத்துக்கு டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது..

by Chandru, Sep 15, 2020, 18:45 PM IST

சிங்கம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். இவர் திரைப்பட இயக்குனர் ஆனார். கன்னிமாடம் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. சமீபத்தில் டொரொண்டோ தமிழ் சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் பங்கேற்றது. அங்கு அப்படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து இயக்குனரும் நடிகருமான போஸ் வெங்கட் கூறியதாவது:நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றிருந்தாலும் இந்தாண்டு பிப்ரவரி 21-ம் தேதி எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் இயக்குநராக எனது முதல் முயற்சியான 'கன்னி மாடம்' வெளியானது. அன்றைய தினம் பலரும் என்னை தொலைப்பேசியில் வாழ்த்தியது மட்டுமல்லாது, விமர்சன ரீதியாகப் பலரும் கொண்டாடினார்கள். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பது மறக்கவே முடியாது.எத்தனை படங்கள் இதற்குப் பிறகு இயக்கினாலும், முதல் படத்துக்குக் கிடைத்த பாராட்டு, வரவேற்பு என்பது தனி தான் அல்லவா.

இன்னும் 'கன்னி மாடம்' திரைப்படம் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஆம், டொரன்டோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படம் - ரசிகர்கள் தேர்வு" என்ற விருதை வென்றிருப்பதை பெருமையுடன் உங்களிடையே பகிர்ந்து கொள்கிறேன். இப்படியான விருதுகள் கிடைக்கும் போது தான், நம்மை இன்னும் உற்சாகமாக்கி மேலும் ஓட வைக்கும்.

'கன்னி மாடம்' படத்துக்கு ஆதரவு தந்த, தந்துக் கொண்டிருக்கிற தினசரி பத்திரிகையாளர்கள், இணையதள பத்திரிகையாளர்கள், பண்பலை நண்பர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், சமூகவலை தள பயனர்கள் என அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஒத்துழைப்பு எல்லாம் இல்லை என்றால் இதெல்லாம் சாத்தியப்பட்டு இருக்காது. நன்றி!
இவ்வாறு போஸ் வெங்கட் கூறி உள்ளார்.


More Cinema News

அதிகம் படித்தவை